Thursday, August 5, 2010

பின்னிரவில் வீடு திரும்பும் பெண்




பிரிபிரியாய் இழைந்துபோகும்
காற்றில் முகம் கொடுத்து
ஹெட்போனில் காது பொருத்தி
தாழ்தளப் பேருந்தின் தூரத்து மூலையில்
இருள்குடை விரித்த சாலையைப்
பார்த்துவரும் பெண்ணை
நீங்கள் அறிந்திருக்கலாம்.

குழந்தைகள் தூங்காமல் காத்திருக்கலாம்.
மாலை பெய்த சிறுமழையில்
உலர் துணிகள் நனைந்து போயிருக்கலாம்
வாங்கப்படாத ரெஜிஸ்டர் தபால்கள்,
கதவோரம் கேஸ் சிலிண்டர்கள்,
விடாது அழைத்திருக்கக்கூடிய
நீண்டகால தோழி,
பிதுங்கி வழியும் பழைய பேப்பர்,
எல்லாம் அவளுக்காகக் காத்திருக்கலாம்.

பாதியில் நிற்கும் கணினி நிரல்கள்
செய்ய காத்திருக்கும் உதவிகள்
அழைப்புக்கு ஏங்கியிருக்கும் அம்மா
எடுத்துச் செல்லவேண்டிய காகிதங்கள்
எல்லாமும் ஞாபகம் வரலாம்.

காதுக்குள் முயங்கிய இசையும்,
உடல்சோர்வும் பிணைய
சட்டெனத் தன் இருப்பு மறந்து
கணநேரம் துயில் மறைக்க
தூரத்து நட்சத்திரங்களும் நானும்
அவள் கவலைகளை வாங்கிக் கொண்டோம்.

சரியான பேருந்து நிறுத்தத்தில் அவள் இறங்குவது
இனி எங்கள் பொறுப்பு.

0 comments:

Post a Comment