Friday, July 23, 2010

ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!

யுகம் யுகமாய்
வெளியிருப்பவர்
உள்ள செல்லவும்
உள்ளிருப்பவர்
வெளி வரமுடியாமலும்
தொடரும் சங்கிலிப் போராட்டம்

கால மாற்றத்தின்
கோலமதில் பட்ட
ஏமாற்ற்றங்களின்
அழுத்தத்தால்
புழுங்கி புழுங்கி
ரத்த அழுத்தம் தீவிரமடைய

கோபப் புயலாய்
வீசிய பொருட்கள்
இடியாய் மனைவி
குழந்தை மேல் பட்டிடினும்
கண்ணீர் வெள்ளத்துக்கு
காரணமாயினும்
வலுவிழந்த அழுத்தத்தால்
பத்து ரூபாய் மல்லியிலும்
பொம்மையிலும்
வாழ்க்கையை
சகஜ நிலைக்குத் திருப்பும்
சாமானிய‌த் த‌க‌ப்பன்..

ஆயிரந்தான் இருந்தாலும்
அடிச்சாலும் உதைச்சாலும்
ஆசையா 'அதுக்கு
உன்னைத்தானடி தேடி வாரான்!
புரிஞ்சி நடந்துக்கடி என்று
த‌லைமுறை சொன்ன
சுக‌வாழ்வு சூத்திர‌த்தை
நினைவிறுத்தி
இன்னும் வ‌லித்த‌
இடுப்பைத் த‌ட‌விய‌ப‌டி
முக‌ம் க‌ழுவிப் பொட்டிட்டு
க‌ண் அவ‌னுக்காய்
காத்திருக்கும் தாய்..

அப்பாவின் முகத்தில்
புயல் எச்சரிக்கைக் கொடி
பார்த்த மாத்திரத்தில்
அம்மாவின்
க‌ண்ணீர் மழைக்கஞ்சி
அடுத்த‌ வீட்டில்
அடைக்க‌ல‌ம் தேடி
பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..

அடிக்க‌டி நிக‌ழும்
அந‌ர்த்த‌ங்க‌ள் தாங்கி
முளைத்து, துளிர்த்து
த‌ழைத்து, அழிந்து
மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!

0 comments:

Post a Comment